×

தெங்குமரஹாடா வனப்பகுதியில் ஆதிகருவண்ணராயர் கோயில் விழா : ஆண்டுக்கு 3 நாள் மட்டுமே ஆட்களுக்கு அனுமதி

சத்தியமங்கலம்: தெங்குமரஹாடா வனப்பகுதியில் உள்ள ஆண்டில் 3 நாட்கள் மட்டுமே வழிபாடு நடக்கும் ஆதிகருவண்ணராயர் கோயில் பொங்கல் விழாவிற்கு 500 வாகனங்களில் பக்தர்கள் சென்றனர். பவானிசாகர் வனச்சரகம் தெங்குமரஹாடா வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆதிகருவண்ணராயர் கோயில் உள்ளது. உப்பிலி நாயக்கர் சமுதாய மக்களின் குலதெய்வமான இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசிமாதம் மாசிமகத்தில் பொங்கல் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு 3 நாள் திருவிழா நேற்று தொடங்கியது. இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பஸ், லாரி, வேன், டெம்போ, ஜீப் உள்ளிட்ட   வாகனங்களில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து பொங்கல் வைத்து ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி கருவண்ணராயரை வழிபட்டு செல்வர்.

வனப்பகுதியில் உள்ள இக்கோயிலுக்கு செல்ல விழா நடைபெறும் 3 நாட்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் நேற்று காலை முதல் பொதுமக்கள் வாகனங்களில் கோயிலுக்கு சென்றனர். காராச்சிக்கொரை சோதனைச்சாவடியில் அனைத்து வாகனங்களிலும் மதுபானங்கள் உள்ளதா எனவும், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என சோதனையிடப்பட்டு பின்னர் அனுமதிக்கப்படுகிறது. நேற்று மட்டும் 500 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்றதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இன்று அதிகாலை 1 மணி முதல் கோயிலில் ஆடுகள் பலிடுவது தொடங்கி தொடர்ந்து விழா நடைபெறும். இந்த ஆண்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் கோயில் வளாகத்தில் கடைகள் வைப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. வனத்துறையினரும், பவானிசாகர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Adigaruva Vannar ,temple festival ,forest ,Tenggamarahada , Thekankarhadah, Adi Krishna Kovaiyar temple, devotees
× RELATED புகழ்பெற்ற வேலூர் குடியாத்தம்...